×

சபரிமலை சீசன் தொடக்கம் சென்னை-கோட்டயம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: ‘‘சபரிமலையில் சீசன் தொடங்கியுள்ளதையொட்டி சென்னை-கோட்டயம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும்’’ என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது. சபரிமலை சீசன் தொடங்கி உள்ள நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கேரளாவின் கோட்டயத்துக்கு சபரி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் இன்று முதல் பயணத்தை தொடங்க உள்ளது. கார்த்திகை மாதம் பிறந்துள்ள நிலையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். இதனால் சபரிமலை கோயிலில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வரும் நிலையில் பக்தர்கள் செல்ல தொடங்கி உள்ளனர்.

41 நாட்கள் பூஜைகள் நடைபெற்று டிசம்பர் 27ம் தேதி ஐயப்பனுக்கு மண்டல பூஜை நடைபெறும். இந்த ஆண்டும் வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் ஐய்யப்ப சாமி கோயிலுக்கு செல்ல மாலை அணிந்துள்ளனர். இந்நிலையில் தான் சபரிமலைக்கு சிறப்பு பஸ்கள், ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னையில் இருந்து சபரிமலைக்கு சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-கோட்டயம் (கேரளா) இடையே வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்: 06027/06028) இயக்கப்படுகிறது.

சென்னை சென்ட்ரல்-கோட்டயம் சிறப்பு கட்டண ரயில் (06027) ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 1.10 மணிக்கு கேரளாவின் கோட்டயத்தை சென்றடையும். அதன்பிறகு வரும் 26ம் தேதி, டிசம்பர் 3, 10, 17, 24 ஆகிய தேதிகளில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இயங்கும். மறுமார்க்கமாக கோட்டயம்-சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் (06028) வாரந்தோறும் திங்கட்கிழமை மட்டும் இயக்கப்பட உள்ளது.

இந்த ரயில் கோட்டயம் ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை (இன்று) இரவு 7 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 10.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும். அதன்பிறகு வரும் 27 ம் தேதி, டிசம்பர் மாதம் 4, 11, 18, 25 மற்றும் ஜனவரி மாதம் 1ம் தேதி வரை திங்கட்கிழமை தோறும் கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு செல்லும்.

இந்த சிறப்பு ரயிலில் இரண்டடுக்கு ஏசி பெட்டி 2, 3 அடுக்கு ஏசி பெட்டி 6, 3 அடுக்கு ஏசி பெட்டி 4, 6 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 2 பொது பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த ரயில் இருமார்க்கமாக பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போடனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் வடக்கு ரயில் நிலையங்களில் நின்று வருகின்றன. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post சபரிமலை சீசன் தொடக்கம் சென்னை-கோட்டயம் இடையே சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே தகவல் appeared first on Dinakaran.

Tags : Sabarimala Season ,Chennai ,Kottayam ,Southern Railway ,Sabarimalai… ,Dinakaran ,
× RELATED கேரளாவில் 2 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு